குறைந்தபட்சம் இரண்டு, அதிகம் தகுதிக்கேற்ப!

Click ▶ for audio

திரு.கிருஷ்ணதாசன்

ஆஸ்திரேலியாவில் வசித்து வரும் எனது முன்னாள் மாணவர் ஒருவர் சில மாதங்களுக்கு முன் வலைதளத்தில் ஒரு பதிவை பகிர்ந்திருந்தார். அதில் அவர்கள் சமூகத்தில் தற்கொலை, மணவிலக்கு அதிகமாகிவிட்டது. ஏதாவது விழாவிற்கு அல்லது விருந்திற்கு தந்தையும் குழந்தைகளும் அல்லது தாயும் குழந்தைகளுமே அழைத்து வரப்படுகின்றனர்.  இதைப் பற்றி யாரும் அதிகம் கவலைப்படுவதில்லை என தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார்.  இதே நிலை தமிழகத்திலும் பல இடங்களில் காணப்படுகிறது.  தற்கொலை, மணமுறிவுகளுக்கு பல காரணங்கள் உள்ளன.  முக்கியமான காரணம் தனிக்குடித்தனம்.  மற்றொரு காரணம் பெரும்பாலான குடும்பங்களில் ஒரு குழந்தையுடன் நிறுத்திக் கொள்வது.   

சில வருடங்களுக்கு முன் அமெரிக்காவில் வசித்து வரும் எனது முன்னாள் மாணவி ஒருத்தி தனது கணவர் மற்றும் கைக்குழந்தையுடன் என்னை சந்திக்க வந்திருந்தாள்.  பேசிக்கொண்டிருக்கும் போது அவளிடம், ‘அடுத்த குழந்தையை எப்போது பெற்றுக் கொள்ளப் போகிறாய்’ என்றேன்.  அவளோ, ‘இப்போது என்ன அவசரம்’ என்றாள்.  ஒரு குழந்தை போதும் இன்னொன்று வேண்டாம் என்ற தொனியில் பேசினாள்.  அவள் கணவரோ, ‘என் அப்பாவும் ‘ஒரு குழந்தை போதாது இன்னும் பெற்றுக் கொள்ள வேண்டும்.  தனி மரம் தோப்பாகாது’ என்று அடிக்கடி சொல்வார்.  இவள் தான் ஒத்துழைக்கவில்லை’ என்றார்.  நான் அவளிடம், ‘உன் எண்ணங்கள் தவறானது. குறைந்தது இரண்டு குழந்தையாவது பெற்றுக் கொள்ள வேண்டும்’ என்றேன்.  மற்றும் ‘இரண்டு குழந்தைகளுக்கும் வயது வித்தியாசம் அதிகபட்சம் இரண்டு வயது தான் இருக்க வேண்டும். அதுதான் நல்லது.’ என்றேன்.  

‘இரண்டு குழந்தைகள் இருந்தால் என்னென்ன நன்மைகள் என்று கூறுகிறேன்.  கவனமாகக் கேள்.  இரண்டு குழந்தைகள் இருந்தால் அவர்கள் அடிக்கடி கொஞ்சிக் கொள்வார்கள், பேசிக் கொள்வார்கள் மற்றும் சண்டையிட்டுக் கொள்வார்கள்.  அப்போது சரியாக நீதி வழங்க வேண்டும்.  ஒரு குழந்தை என்றால் அவர்கள் கேட்பதையெல்லாம் வாங்கிக் கொடுக்க வேண்டியதாக இருக்கும்.  ஒவ்வொரு விஷயத்திலும் அவர்களுக்காக வளைந்து கொடுக்க வேண்டிய நிலை வரும்.  இரண்டு மூன்று குழந்தைகள் இருந்தால் வாங்கியதை அவர்களுக்கு பகிர்ந்து கொடுக்க வேண்டியிருக்கும்.  அப்போது அவர்கள் பகிர்ந்து கொள்ளும் பழக்கத்தையும் விட்டுக் கொடுக்கும்  குணத்தையும் வளர்த்துக் கொள்வர்.  இதுவே ஒரே ஒரு குழந்தையென்றால் தனக்கு தான் எல்லாம் என்ற எண்ணம் வளரும்.  பிற்காலத்தில் திருமணத்திற்கு பிறகும் இதே குணத்தினால் பல பிரச்சனைகள் வருகின்றன.  விட்டுக் கொடுக்காமல் பிறகு விலகிவிடுகின்றனர்.  அடுத்து முன்பெல்லாம் கூட்டுக் குடும்ப வாழ்க்கை.  பிள்ளைகளை பெற்றோர் திட்டினால் அல்லது கடுமையாக கண்டித்தால் அவர்கள் அழுது கொண்டே தனது தாத்தா பாட்டியிடம் சென்று முறையிடுவர்.  அவர்களும் ஆறுதல் சொல்வர்.  ஆனால் இன்றோ பெரும்பாலானோர் தனிக்குடித்தனம் சென்றுவிடுகின்றனர்.  இதனால் குழந்தைகள் தங்கள் உணர்வுகளை பகிர்ந்து கொள்ள முடியாமல் கஷ்டப்படுகின்றனர்.  குறைந்தது இரண்டு குழந்தைகள் இருந்தால் ஒருவருக்கொருவர் ஆறுதலாக இருப்பார்கள்.  ஒருவருக்கொருவர் வடிகாலாக இருப்பர். சிரித்து விளையாடவும் பிரச்சனைகளை பகிர்ந்து கொள்ளவும் அவர்களுக்கு மிகவும் வசதியாக இருக்கும். ஆதலால் மனப் பிரச்சனைகள் குறையவேண்டுமென்றால் குறைந்த பட்சம் இரண்டு குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும்.  பெருளாதார நிலை நன்றாக இருந்தால் இரண்டிற்கு மேலும் பெற்றுக் கொள்ளலாம்.  தவறில்லை.  இரண்டு குழந்தைகளுக்கு மேலிருந்தால் அவர்களின் மனவளர்ச்சி மிகச் சிறப்பாக இருக்கும்’ என்றேன். அடுத்த முறை சென்னை வரும்போது இரண்டு குழந்தைகளுடன் வந்து சந்தித்தாள்.

ஒரு குழந்தைக்கும் அடுத்த குழந்தைக்கும் உள்ள வயது வித்தியாசம் அதிகபட்சம் இரண்டு வயது தான் இருக்க வேண்டும்.  மருத்துவர்களைக் கேட்டால் அவர்கள் குறைந்தது 3 அல்லது 4 ஆண்டுகள் இடைவெளி இருப்பது நல்லது என்பார்கள்.  அவர்கள் உடல் நலனை மட்டும் தான் கவனத்தில் கொள்கிறார்கள்.  மன வளர்ச்சியைப் பற்றி கவலைப்படுவதில்லை.  இப்போது இரட்டை குழந்தைகள் என்றால் அவர்களுடைய மன வளர்ச்சி மிகச் சிறப்பாக இருக்கும்.  ஆரம்பத்தில் அவர்களை வளர்ப்பது மிகக் கடினமாக இருக்கும்.  கஷ்டப்பட்டு நன்றாக வளர்த்தால் பிறகு அவர்களது எதிர்காலம் சிறப்பாக இருக்கும்.  

இரண்டு குழந்தைகளுக்கு இடையிலான வயது வித்தியாசம் இரண்டு வயதிற்கு மேலிருந்தால் அவர்களுக்குள் ஒரு வித பொறாமை குணம் (Possessiveness) உருவாகும், நம் உடைமைகளையும் உரிமைகளையும் பங்கிட இன்னொருத்தர் வந்திருக்கிறார்களே என்ற எண்ணம் (Possessiveness) அதிகமாக இருக்கும்.  வயது வித்தியாசம் அதிகரிக்க அதிகரிக்க இதுவும் அதிகமாகும்.  ஏனென்றால் முதல் மூன்று வருடத்திற்கு முதல் குழந்தையிடம் நாம் அதிக பாசம் காட்டுகிறோம்.  நம்மிடம் அக்குழந்தை மிகவும் நெருக்கமாக இருக்கும்.  பிறகு நீண்ட இடைவேளைக்கு பிறகு இன்னொரு குழந்தை பிறக்கிறது என்றால் இப்போது நாம் பிறந்த குழந்தையின் மீது அதிக பாசம் காட்ட ஆரம்பிக்கிறோம்.  இதனால் முதல் குழந்தைக்கு ஒரு விதமான பொறாமை எண்ணம் (Possessiveness) ஏற்படும்.  அதன் விளைவு மோசமாக இருக்கும்.  

அதற்காக ஒரு குழந்தை மட்டுமே இருந்தால் கண்டிப்பாக மனப் பிரச்சனைகள் உண்டாகும் என்றோ இரண்டு அல்லது அதற்கு மேலிருந்தால் மனப்பிரச்சனைகள் இருக்காது என்று 100 சதவிகிதம் கூற முடியாது.  எல்லாவற்றிலும் விதிவிலக்குகள் உண்டு.  பெரும்பாலும் இரண்டோ அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளோ இருந்தால் கண்டிப்பாக மனப்பிரச்சனைகள் பிற்காலத்தில் குறையும். நீங்கள் கூர்ந்து ஆராய்ந்தால் உண்மையை உணர்ந்து கொள்வீர்கள்.

உங்கள் வீட்டிலோ அல்லது சுற்றத்தினர் வீட்டில் நீங்கள் இந்நிகழ்வுகளை கண்டிருக்கலாம்.  தாய் ஓய்விலிருக்கிறாள்.  முதல் குழந்தை விளையாடிக் கொண்டிருக்கும்.  பாட்டியோ அல்லது வேலைக்காரியோ பிறந்த கைக்குழந்தையை வைத்திருக்கின்றனர்.  குழந்தையின் தாயோ, ‘சிறு குழந்தையை கொஞ்சம் என்னிடம் கொடுக்கிறீர்களா’ என்ற சத்தம் கேட்டவுடன் பெரிய குழந்தை உடனே தாயின் மடி மீது சென்றமர்ந்துகொள்ளும்.  அப்போது பெரிய குழந்தையை அவ்விடத்திலிருந்து மாற்றுவது மிகவும் கடினமாக இருக்கும்.  அழுது அடம்பிடிக்கும்.  சிறு குழந்தையை அடிக்கும்.  இப்படிப் பலப்பல. எனக்குத் தெரிந்த ஒரு பெண். அவளுக்கும் அவள் தங்கைக்கும் சுமார் மூன்று வயதிற்கு மேல் வித்தியாசம். அவளுக்கும் தன் தங்கையின் மீது குழந்தைப் பருவத்தில் பொறாமை உண்டு.

ஒரு நாள் தன் அன்னையின் மடியில் தங்கை படுத்துக் கொண்டிருந்ததைப் பார்த்து, ‘அம்மா உனக்கு கால் வலிக்கும் தங்கையை படுக்கையில் கிடத்த வேண்டியதுதானே’ என்றாள். அன்னை கிடத்தியதும் தாயின் மடியில் இவள் படுத்துக் கொண்டு எழுந்திருக்கவில்லை. தொட்டிலில் படுத்திருக்கும் தங்கை மேல் செருப்புகளை தூக்கிப் போடுவதுமுண்டாம்.

எனது வீட்டிலும் எனது பெண்ணிற்கும் விதி வசத்தால் பையனுக்கும் நான்கு வயது வித்தியாசம். அடிக்கடி பையனுக்கும் பெண்ணிற்கும் இப்படிப்பட்ட பிரச்சனைகள் தலை தூக்கும். ஒரு நாள் பையன் தூங்கிக் கொண்டிருந்தான். பெண்ணை காலையில் எழுப்பும் போது, ‘அவன் மட்டும் வெகு நேரம் தூங்குகிறான் என்னை ஒழுங்காகத் தூங்கவிடுவதில்லை’ என்றாள். ‘அவன் வயது வேறு உன் வயது வேறு. நீ தம்பியை விட நான்கு வயது மூத்தவள்’ என்றேன். 

ஒரு நாள் பையன் ‘அக்கா மட்டும் அதிகமாக செல் பேசி உபயோகிக்கிறாள். என்னை இப்படிக் கட்டுப்படுத்துகிறீர்களே’ என்றார். ‘அவள் பெரியவள். அவளுக்கு தேவைப்படுகிறது உனக்கு இந்த வயதில் தேவையில்லை’ என்றேன். ஆனாலும் அவன் சமாதானமைடயவில்லை. இதனால் பல பிரச்சனைகள். இப்படி பல நிகழ்வுகள்.

மேலும் தம்பி, தங்கை, அண்ணன், அக்கா இப்படி யாரும் இல்லாமல் ஒரே குழந்தையாக வளர்பவர்கள் தாய் தந்தையர் அரோக்கியமாக இருக்கும் வரை அதிகம் கவலைப்படுவதில்லை.  அவர்கள் காலத்திற்குப் பிறகு உதவிக்கு ஆள் இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள்.  இவர்களின் குழந்தைகளுக்கோ இன்னும் மோசம்.  பெரியப்பா, பெரியம்மா, சித்தி, அத்தை, மாமா இப்படி எந்த உறவுகளும் இவர்களுக்குக் கிடையாது.  பிற்காலத்தில் சிறு மன அழுத்தமானாலும் வடிகாலுக்கு வசதி இல்லை.  மனப்பிரச்சனைகளை வாய்விட்டு பேச உறவுகளில்லை.  மிகவும் மன அழுத்தத்தினால் பாதிக்கப்படுவர்.

இவன் தனி மனிதன் தானே இவனுக்கு யாருமில்லை என்று நினைத்து இவர்களின் சொத்துக்களுக்கு சில பேராசைக்காரர்கள் குறி வைத்து இவர்களை வீழ்த்திவிடுகின்றனர்.  இதைப் பற்றி நண்பர்கள் சிலர் கூறி நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.  இன்னும் பல பிரச்சனைகளும் இவர்களுக்குண்டு.  

ஒரு நாள் எனது முன்னாள் மாணவர் திரு. சிவக்குமாரிடம் பேசிக் கொண்டிருக்கும் போது, ‘ உனக்கு எத்தனை குழந்தைகள்’ என்றேன். அவரோ, ‘நீங்கள் இரண்டு குழந்தைகள் பெற்றுக்கொள்ளுங்கள் என்று முன்னர் கூறியிருந்தீர்களே அதன்படி இரண்டு குழந்தைகள் பெற்றுக் கொண்டேன்’ என்று கூறினார். எனக்கும் மகிழ்ச்சி.

இன்னொரு மாணவர் திரு. விஜய். எனது மிகச் சிறந்த மாணவர்களில் இவரும் ஒருவர். அமெரிக்காவில் வசித்து வருகிறார். ஒரு நாள் பேசிக் கொண்டிருக்கும் போது ‘எத்தனை குழந்தைகள் உள்ளனர்’ என்றேன். ‘ஒரே ஒரு பெண்’ என்றார். ‘சீக்கிரம் இன்னொரு குழந்தை பெற்றுக்கொள்’ என்று காரணத்தை விளக்கினேன். அவரும் அதை செயல்படுத்தினார்.

எனது உறவுக்காரப் பெண்ணொருத்தியிடம். குழந்தை பிறந்து சில மாதங்களானதும், ‘அடுத்த குழந்தையை எப்போது பெற்றுக் கொள்ளப் போகிறாய்’ என்றேன். ‘இப்போது என்ன அவசரம் சித்தப்பா?’ என்றாள். ‘குறைந்தது இரண்டு குழந்தைகள் கண்டிப்பாகத் தேவை. அதிகபட்சம் இடைவெளி இரண்டு குழந்தைகளுக்கும் இரண்டு வயது தான் இருக்க வேண்டும். வயது வித்தியாசம் அதிகரிக்க அதிகரிக்க பிரச்சனைகள் அதிகரிக்கின்றன. ஆதலால் உடனடியாக அடுத்த குழந்தையையும் பெற்றுக் கொள்ளும் வழியைப்பார். ‘என்ன உங்கள் குழந்தைகள் இருவருக்குள்ளும் மட்டும் நான்கு வருட இடைவெளிகள்’ என்று நினைக்கிறாயா? அது விதியின் விளையாட்டு. இரண்டு குழந்தைகளுக்குமிடையில் ஒரு ஆறு மாத கருக்குழந்தை இயற்கையால் கொல்லப்பட்டது’ என்றேன். எனது ஆறு மாத கருக்குழந்தையைக் கொல்ல எனது பெண்ணையும் அம்மாவையுமே கருவியாக்கியது.  ஆம்! நாம் எவ்வளவுதான் தெரிந்து, அறிந்து செயற்பட்டாலும் விதி ஒரு பக்கம் சதி செய்கிறது. ஆதலால் எப்பொழுதும் புண்ணியச் செயல்களை அதிகரித்துக் கொண்டிருக்க வேண்டும். பாவச் செயல்களை தவிர்க்க வேண்டும்.

இப்போது நீங்கள் கேட்கலாம், ‘ஒரு குழந்தைக்கு மேல் பெற்றுக் கொண்டால் நாட்டின் மக்கள் தோகை அதிகரிக்குமே’ என்று.  இதே போல் தான் சீன நாட்டில் நாட்டின் மக்கள் தொகை மிக அதிகமாகிவிட்டது. ஒரு குழந்தைக்கு மேல் பெற்றுக் கொள்ள கூடாதென்று சட்டம் இயற்றினார்கள். மீறினால் அரசாங்க ஊழியர்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடையாது போன்ற பல தண்டனைகளை விதித்தார்கள்.  பொது மக்களுக்கும் பல கட்டுப்பாடுகள்.  பொது மக்களும் இந்தியாவை போல் சீனாவிலும் ஆண் குழந்தைகளுக்கு தான் முன்னுரிமை கொடுத்தார்கள்.  இதனால் ஒரு காலகட்டத்தில் பல கோடி இளைஞர்களுக்கு திருமணம் செய்து கொள்ள  பெண்ணில்லாமல் கஷ்டப்பட்டார்கள்.  இதனால் பிற்காலத்தில் அரசாங்கமே ஆங்காங்கே விபச்சார விடுதிகளை திறந்தார்கள்.  இது மட்டுமல்ல நாட்டில் முதியவர்கள் எண்ணிக்கை அதிகரித்து இளைஞர்கள் மிகக் குறைந்ததால் வேலைகளுக்கு தகுந்த ஆட்கள் கிடைக்காமல் கஷ்டப்பட்டு பிறகு ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக் கொள்ள வேண்டும் என்று நிர்பந்தித்த அரசாங்கமே ஒரு குழந்தைக்கு மேல் பெற்றுக் கொண்டால் சலுகைகள் அதுவும் பெண் குழந்தைகளை பெற்றுக் கொண்டால் நிறைய சலுகைகள் என்று அறிவித்தார்கள்.  இப்போது சீனாவில் மூன்று குழந்தைகள் பெற்றுக் கொள்ளலாம்.

இப்போது நமது நாட்டிற்கு வருவோம்.  இங்கு மக்கள் தொகையை எப்படி கட்டுபடுத்துவது.  அதாவது நாம் பிறப்பையும் கட்டுப்படுத்தக் கூடாது இறப்பையும் கட்டுப்படுத்தக் கூடாது.  நாம் அறிவியல் முன்னேற்றத்தினால் இரண்டையுமே கட்டுப்படுத்துகிறோம்.  இயற்கையை ஒரு போதும் மனிதன் வெற்றி கொள்ள முடியாது.  இயற்கை எல்லாவற்றையும் சமப்படுத்தவே விரும்புகிறது.  ஆதலால், மக்கள் தொகையை கட்டுப்படுத்த ஒரே வழி மனிதன் சுயக்கட்டுபாட்டை அதிகரிப்பது தான்.  மற்றும் இயற்கையை அதன் போக்கில் விட்டுவிட வேண்டும்.

சுயக்கட்டுபாடு அதிகரிக்கும் போது அவன் தேவைப்படும் குழந்தைகளுடன் நிறுத்திக் கொள்கிறான்.  அவனது குணங்களும் சிறக்கிறது.  ஆம், சுயக்கட்டுப்பாட்டை பயிற்சியால் அதிகரிப்பதன் மூலம் பிறப்பு மற்றும் இறப்பையும் நாம் கட்டுப்படுத்தலாம்.  சுயக்கட்டுப்பாட்டை அதிகரிப்பது நாட்டிற்கு பல வித நன்மைகளை அளிக்கக் கூடியது.  தன்னம்பிக்கை, சுயக்கட்டுப்பாடு, சேவை மனப்பான்மை போன்வற்றை அதிகரிக்கும் பயிற்சிகளை கல்வித் திட்டத்தில் சேர்த்து செயல்படுத்த வேண்டும்.  கல்வியாளர்களும் அரசாங்கமும் இதற்கு முன்வர வேண்டும். ஆதலால் அன்பு நெஞ்சங்களே! குறைந்தது இரண்டு குழந்தைகளைக் கண்டிப்பாகப் பெற்றுக் கொள்ளுங்கள்.  அதிகம் உங்கள் தகுதிக்கேற்ப.  தகுதி என்பது குழந்தை பராமரிப்பு, மற்றும் பொருளாதாரத் தகுதி.  அதில் தலையிட நான் விரும்பவில்லை.  சுயக்கட்டுப்பாட்டை அதிகரித்துக் கொள்ளுங்கள்.  தேவையுடன் நிறுத்திக் கொள்வீர்கள்.  நன்றி.  வணக்கம். அடுத்த பதிவில் சந்திப்போம்.